‘பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் பிரச்னையை, ஒரு மாடல் அழகி மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,” என, தமிழக பா.ஜ., பிரமுகர் காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ., கலை- இலக்கிய பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் கூறியதாவது:பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் அவரது மகள் மதுவந்தியை குறிவைத்து, பரபரப்பாக்கி வருகின்றனர். என்ன காரணம்,- இருவரும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்பட்டனர் என்பது தான். பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுவது, அவ்வளவு பெரிய குற்றமா? இது சிலரின், ‘டார்கெட்’ என்றால், வேறு பலரின், ‘டார்கெட்’ ஜாதிய ரீதியில், இந்தப் பள்ளியை வீழ்த்த வேண்டும் என்பது. நடந்த சம்பவத்தில் குற்றம் இழைத்தவர், ஆசிரியராக இருந்த ராஜகோபாலன். அவரை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; அதில் தவறில்லை. ஆனால், பள்ளியையும், பள்ளி நிர்வாகத்தையும் வம்புக்கு இழுப்பது ஏன்?
பள்ளியில் ‘சீட்’ கிடைக்காதவர்கள் எல்லாம் சேர்ந்து, இந்த பிரச்னையை பெரிதுபடுத்துவதாக சொல்கின்றனர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதோடு, பள்ளி நிர்வாகத்துக்கு நெருக்கமான குடும்பத்தைச் சேர்ந்த, எனக்கும் அந்தப் பள்ளியில் ‘சீட்’ கிடைக்கவில்லை தான். அதற்காக, அந்தப் பள்ளி மீது அவதுாறு செய்ய முடியுமா?தமிழகத்தைப் பொறுத்தவரை, தி.மு.க., புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கிறது. கொரோனா பிரச்னையை மறைக்க, ஒரு கருவி தேடிக் கொண்டிருந்தனர். வசமாக சிக்கி விட்டது, பள்ளி பாலியல் துன்புறுத்தல் விவகாரம். நடந்தது தவறு தான். அதை யாரும் இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால், எங்குமே இந்த விவகாரம் நடக்காதது போல, ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதை பெரிதுபடுத்துவதைத் தான் ஏற்க முடியவில்லை. ‘பள்ளியை அரசு ஏற்று நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் சொல்கிறார் என்றால், என்ன அர்த்தம்? பிராமணர் நடத்தும் பள்ளி, சிறப்பாக நடத்தப்பட்டு வந்தால், அதை அரசு ஏற்று நடத்துமா?
இந்த பள்ளியில் படித்த ‘மாடல்’ கிரிபாலி சாம்டாரியா என்பவர் தான், பாலியல் துன்புறுத்தல் குறித்து, புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது, போலீஸ் விசாரணைக்குப் பின் தெரிய வரும்.
ஒரு விஷயத்தை மடைமாற்றம் செய்வதற்காக, காங்., தான், இப்படிப்பட்ட காரியங்களை செய்து வந்தது. இப்போது, தி.மு.க.,வும் செய்யத் துவங்கி இருக்கிறது. குற்றம் என்றால் எல்லாமே குற்றம் தான். முதல்வர் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில், ஆங்கில மொழியில் பேசவில்லை என்றால், அபராதம் விதிக்கின்றனர். தாய் தமிழ் மொழியில் பேசக் கூட, சுதந்திரம் இல்லாமல் தான், அங்கே குழந்தைகள் தத்தளிக்கின்றனர்.
இதுமாதிரி குற்றங்கள், பிரச்னைகள் என்றால், எல்லா இடங்களில் இருப்பதை சொல்லிக் கொண்டே போகலாம். அங்கு படிக்கும் பிள்ளைகளை விட்டு புகார் கொடுக்கச் சொல்கிறேன். அமைச்சர் மகேஷ் விசாரித்து, குறிப்பிட்ட அந்த பள்ளியையும் அரசுடைமை ஆக்குவாரா?இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறினார்.












